Header Ads

Breaking News

கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணியலாமா?


இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும். அதன் பூரணத்தன்மை அனைத்து வகையான மக்களுக்கும் அவர்களது அணைத்து வகையான பிரச்சணைகளுக்கும் தீர்வு சொல்வதிலும் அத்தீர்வுகள் எல்லாக் கால மக்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதிலும் வெளிப்படையாகத் தென்படுவதை நாம் பார்கிறோம்.
எனவே, ஆட்சி செய்வது எப்படி என்பதை இஸ்லாம் எமக்கு சொல்லித்தருவது போல் தான் ஆடை அணிவது எப்படி என்பதையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் எமக்கு வலியுருத்துகின்றன.
இவ்வாறு இஸ்லாம் ஆடை தொடர்பாக வழங்கியுள்ள போதனைகளில் சிலதாக,
‘ஆடை ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்’,
அது அவ்றதை (அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை) மறைக்கக்கூடியவாறு இருக்க வேண்டும்.
‘அவ்றத்தின் கன பரிமாணங்களைக் காட்டக்கூடியவாறு இறுக்கமானதாக அமைதல் கூடாது’
போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இவ்வாறே ஆடை தொடர்பாக இஸ்லாம் வழங்கியுள்ள முக்கிய போதனைகளில், வழிகாட்டல்களில் ஒன்றுதான் ஆண்கள் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது கூடாது (ஹறாம்) என்பதுமாகும்.
இது தொடர்பாகன ஆதாரங்களை இக்கட்டுரையில் சுரக்கமாக அலசுவோம்.
‘அப்துர்ரஹ்மான் என்பவர் நபித்தோழரான அபூ ஸஈத் என்பவரிடம் கீழ் ஆடை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஏதாவது கூற நீங்கள் கேட்டுருக்கின்றீர்களா?’ என வினவினார்கள். அதற்கவர் ‘ஆம் நபி (ஸல்) அவர்கள் ‘விசுவாசிகளில் கீழ்ஆடை முழங்காலுக்கும் கரண்டைக்காலுக்கும் இடையில் நடுவில் இருக்க வேண்டும். எனினும் நடுவிலிருந்தும் கரண்டைக்கால் வரை இறங்கியிருந்தாலும் குற்றமில்லை. ஆனால் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை இறங்கியிருந்தால் அது நரகத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் எனக்கூறிய பின், ‘யார் பெருமைக்காக தரையில் கீழ் ஆடையை நிலத்தில் இழுபடச் செய்கிறாரோ அவரை அழ்ழாஹ் மறுமையில் பார்க்கமாட்டான் என மூன்று முறை கூறுவததைக் கேட்டேன் என்றார்கள்.’ அறிவிப்பாளர் அபூ ஸஈத் (றழி) நூல்: இப்னுமாஜாஹ் 3563
மேற்படி ஆதாரபூர்வமான நபி மொழி பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டுகின்றன.
1.    ஒரு விசுவாசியின் கீழ் ஆடை முழங்காலுக்கும் கரண்டைக்காலுக்கும் இடையில் சரியாக நடுவில் இருக்க வேண்டும்.
2.    நடுவிலிருந்து கரண்டைக்கால் வரை ஆடை இறங்கியிருத்தல் குற்றமில்லை. இறங்கியிருக்கலாம்.
3.    கரண்டைக்காலுக்குக் கீழு; ஆடை அணிவது ஹறாம். நரகத்திற்க இட்டு செல்லும்.
4.    பெருமைக்காக ஆடையை யார் நிலத்தில் இழுபடும் அளவுக்கு அணிகின்றாரோ அவரை அழ்ழாஹ் மறுமையில் பார்க்க(வும்) மாட்டான்.
இவைகளில் கீழ் உள்ள (3வது, 4வது) இருபோதனைகளையும் சற்று ஆழமாக அவதானித்தால் இரு வேறு விதமான தடைகளையும் இரு வேறு விதமான தண்டனைகளையும் காணலாம் அவைகளாவன:
1.    பெருமைக்காகவோ, பெருமைக்காக அல்லாமலோ கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணிவது ஹறாம், பாவம்.
2.    பெருமைக்காக கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணிவது மறுமையில் அழ்ழாஹ்வின் பார்வைக்கும் அருகதையில்லாத பெரும்பாவமாகும் .
இந்த எளிய விடயத்தை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக சிலரும், தங்களது இரசனைக்கும், பழக்கவழக்கத்திற்கும், கலாசாரத்திற்கும் ஒத்து வரவில்லை என்பதற்காக வேறு சிலரும் கரண்டைக்காலுக்குக் கீழு; அணியலாம்!! என்றும் பெருமைக்காக அணிவதுதான் கூடாது என்றும் கூறுவதை அடிக்கடி அவதானிக்கின்றோம்.
இத்தகையோர் தங்களது கூற்றுக்கு ஆதாரங்களாக ‘பெருமைக்காக’ என ஹதீஸில் காரணம் கூறப்பட்டுள்ளது என்பதையும் , அபூபக்கர் (றழி) அவர்கள் பெருமையில்லாமல் கரண்டைக்குகாலுக்கு ஆடை அணிந்த போது நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
மேற்படி இரு வாதங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம்.
முதலாவது வாதமும் அதற்கான பதிலும்
கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணிவது என ஹதீஸிகளில் பொதுவாக இடம்பெறவில்லை. எனினும் சில ஹதீஸ்களில் ‘பெருமைக்காக’என்று வரையறையுடன் இடம்பெற்றுள்ளது. எனவே, வரையரையின்றி பொதுவாக இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை வரையறையுடன் இடம்பெறும் ஹதீஸ்களுடன் இணைத்து ‘பெருமைக்காக அணிதல் கூடாது’ என்றுதான் விளங்கவேண்டும் என்றும் ‘வரையரையின்றி பொதுவாக இடம்பெறும் ஆதாரங்களை வரையரையுடன் இடம்பெறும் ஆதாரங்களுடன் இணைத்து வரையறை இன்றி இடம்பெறும் ஆதாரங்களுக்கும் குறித்த வரையறையை வழங்குதல்’ என்ற சட்டக்கலை அடிப்படைக்கும் இவ்வாறு விளங்குவதுதான் பொருத்தம் என்பதும் இவர்களது வாதமாகும்.
மேற்படி இவர்களது வாதத்தில் உள்ள வரையறையின்றி இடம்பெறும் ஆதாரங்களை வரையறையுடன் இடம் பெறும் ஆதாரங்களுடன் இணைத்தல் எனும் சட்டக்கலை விதி இவர்கள் இங்கு பிரயோகித்தது போன்று பொதுவானதல்ல. மாறாக வரையறை இன்றி இடம்பெறும் ஆதாரங்களும் வரையறையுடன் இடம்பெறும் ஆதாரங்களும் ஒரே சமனான காரணத்தையும், சட்டத்தையும் கொண்டிருக்கும் போது மாத்திரம்தான் ஒரு வகையான ஆதாரங்களையும் இணைக்க முடியும் என்ற நிபந்தனையை இவர்கள் கவணிக்க தவறிவிட்டனர்.
எனவே, இங்கு கரண்டைக்;காலுக்கு கீழ் ஆடை அணிவது பாவம் என்ற ரீதியிலும் பெருமைக்காக அல்லாது அணிவது பெரும் பாவம் என்ற ரீதியிலும் இரு வேறு விதமான சட்டங்களைக் கொண்ட ஆதாரங்கள் இடம்பெற்றிருப்பதால் இரு வகையான ஆதாரங்களையும் இணைத்து கரண்டைக் காலுக்குக் கீழ் பெருமைக்காக அணிவதுதான் கூடாது என பத்வா சொல்ல முற்படுவது மிகவும் தவறாகும்.
இப்பாரிய தவறுக்கு மிகச்சிறந்த உதாரணமாக விபச்சாரம் செய்வது சட்டத்தைக் குறிப்பிடலாம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘ஒரு மனிதர் (நபியவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும், என்று கூறினார்கள்.
அந்த மனிதர், பிறகு எது (மிகப் பெரும் பாவம்)? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உனது உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும், என்று சொன்னார்கள். அந்த மனிதர், பிறகு எது? என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும், என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்க மாட்டார்கள. மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். எனும் (25:68ஆவது) வசனத்தை அருளினான்.’
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்:ஸஹீஹுல் புஹாரி 6861)
என்ற ஹதீஸ் அடிப்படையில் அடிப்படையில் விபச்சாரம் செய்வதற்கும் அன்டைவீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வதற்கும் இடையிலுள்ள சட்ட வேறுபாட்டை கருத்திற் கொள்ளாது விபச்சாரம் செய்யாதீர்கள் என்ற பொதுவான ஆதாரங்களையும் அண்டைவீட்டாரின் மனைவி என்ற வரையறையும் இணைக்கின்றேன் என்ற பெயரில் பக்கத்து வீட்டுக்காரியுடன்தான் விபச்சாரம் செய்யக்கூடாது எனக் கூறினால் அவரது கூற்றுக்கு எந்தளவு பெறுமானமோ? அதே அளவு பெறுமானம்தான் பெருமைக்காகத்தான் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது கூடாது என்று கூறுபவரின் கூற்றுக்கும் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது வாதமும் அதற்கான பதிலும்
பெருமைக்காக அணியாத போது நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர் (றழி) அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். எனவே, பெருமைக்காக அணிவதுதான் கூடாது. பெருமையின்றி கரண்டைக்காலுக்குக் கீழ் அணியலாம் என்பது இத்தகையோரது இரண்டாவது வாதமாகும். இவர்கள் குறிப்பிடும் ஹதீஸ் பின்வருமாறு அமைந்துள்ளது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
‘எவன் தன் ஆடையை தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், எவன் தன் கீழங்கியை இழுத்துக் கொண்டு செல்கிறானோ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவா சொன்னார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (எவன்) தன் ஆடையை என்று அறிவித்ததைத் தான் நான் கேட்டேன் என பதிலளித்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்:ஸஹீஹுல் புஹாரி 3665)
இந்த ஹதீஸில் அபூபக்கர் (றழி) அவர்கள் கரண்டைக்காலுக்குக் மேல்தான் ஆடை அணிவார்கள் என்றும் அதில் ஒரு பகுதி மாத்திரம் கீழே வழுகி விழும் என்றும் அதைக்கூட அவர்கள் அடிக்கடி சரி செய்து கொள்வார்கள் என்றும் இடம்பெற்றுள்ளதையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஒரு முஸ்லிம் கண்டிப்பாக கரண்டைக்குகாலுக்கு மேல்தான் ஆடை அணியவேண்டும்.
அது கரண்டைக்குகாலுக்கு கீழ் வழுகிவிடும் போது அதை சரி செய்து கொள்ள வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களில் இவர் பெருமைக்கான அவ்வாறு செய்யவில்லை என்பதால் அழ்ழாஹ் மறுமையில் பார்க்க(வும்) மாட்டான்’ என்ற தண்டனைக்கு ஆளாக மாட்டார் என்பதைத்தான் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர பெருமையின்றி கரண்டைக்குகாலுக்கு கீழ் வழுகாமல் நாமகாவே ஆடையணியலாம் என்பதை அல்ல.
எனவே மேற்படி இந்த இரண்டு வாதங்களும் தவறான வாதங்கள் என நிரூபணம் ஆகிவிட்டதால் ஒரு விசுவாசியின் கீழாடை எப்போதும் கரண்டைக்குகாலுக்கு மேல்தான் அமைந்திருக்க வேண்டும் என்பதும் பெருமையின்றி கரண்டைக்குகாலுக்கு கீழ் ஆடையணிந்தால் அது ஹறாம். என்பதும் பெருமைக்காக அணிவது பெரும்பாவமாகும். என்’பதும் ஆடை தொடர்பாக இஸ்லாத்தின் பொன்னான போதனைகளுள் ஒன்றாகும்.
மேலும் இந்த இடத்தில் பெண்களையும் இச்சட்டம் உள்ளடக்குமா என்தையும் தெளிவுபடுத்துவது அவசியமாகும் ‘யார் தனது ஆடையை நிலத்தில் இழுபட் அணிகின்றாறோ அவரை அழ்ழாஹ்பார்க்கவும் மாட்டான்.
எனவே, மேற்படி ஹதீஸ் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணியக் கூடாது என்திலிருந்து பெண்கள் விதிவிலக்கு என்பதையும் பெண்கள் அவர்களுடைய பாதம் மறையும் படி ஆடை அணிய வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது.
இதை (அல்குர்ஆன் 24:31) இறைவசனம் உறுதி செய்வதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
எனவே, தங்களது பழக்க வழக்கத்தினையும் ரசனைக்காகவும் நவநாகரீகம் என்ற பெயரிலும் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணியும் சகோதரர்கள் குறிப்பாக, அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் செயற்பட்டு நரகத்திற்கு இட்டுச் செல்லும் காரியத்தை கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளும் படி  அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி: http://dharulathar.com

No comments

தங்கள் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக!