Header Ads

Breaking News

தொழுகையின் அவசியம்



     உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

     திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.

     இத்தொழுகை எனும் இறைவணக்கம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த, காண்பித்து கொடுத்துள்ள முறையில் நிறைவேற்ற வேண்டும்.

     நபி (ஸல்) அவர்களின் கட்டளை 'என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' என கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர் – மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அறிவிப்பு இப்படியிருக்க, நமது சமுதாயத்தினர் பல்வேறு பகுதிகளில் பல முறைகளில் இப்படித்தான் தொழவேண்டும் இதுவே சரியான முறை என எண்ணி தொழுதுவருகின்றனர். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த முறை நம்மில் பலர் சரியாக அறியாமலிருப்பதுதான். நபி வழிக்கு மாற்றமாக தொழுதால் அது தொழுகையே அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

     தொழுகை குறித்து பல இடங்களில் அல்லாஹ் தனது திருமறையில் எச்சரித்து குறிப்பிட்டுள்னான்.

....முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பட்டுள்ளது'. (அல் குர்ஆன் 4:103).
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்கவே தான் தொழு)கிறார்கள். (அல் குர்ஆன் 107:4,5,6).

...தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்... (அல் குர்ஆன் 30:31).
...இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்...(அல் குர்ஆன் 29:45).
மற்றும் ஏராளமான ஹதீஸ்களில் இத்தொழுகையை குறித்து வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.

     மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும்.
தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.
முஃமினுக்கும் காஃபிருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது. என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள் - நஸயீ, அபூதாவுத், முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்.)
இனி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) தொழுது காண்பித்த தொழுகை முறை குறித்து விரிவாக பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

No comments

தங்கள் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக!